×

மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு நன்மை தரும் வழி முறைகள் (தமிழ்)

ஆக்கம்:

Description

1. மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஈமானும் நற் கருமங்களுமே அடிப்படைக் காரணங்கள். 2. முஃமின், தனக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், பொறுமை மூலமும் எதிர் கொள்வான். 3. முஃமினல்லாதவன் தான் விரும்பியதை அடையும் போது, அதனை அகங்காரத்துடனும், நன்றி கேடான நிலையிலுமே எதிர் கொள்வான். அதனால் அவனின் குணங்கள் மேலும் மோசமடையும். மிருகங்களைப் போன்று பேராசையும், உலக இச்சையும் அவனிடம் அதிகரிக்கும்.

Download Book

மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு நன்மை தரும் வழி முறைகள்

ஆசிரியரின்பெயர்

அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ் ஸஅதீ

கிழ்ச்சிகரமான வாழ்வுக்கு நன்மை தரும் வழி முறைகள்

என்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நமது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக

பரபரப்பான உலகில் மனிதன் ஏதாகிலும் ஒரு காரியத்தில், அல்லது பிரச்சினையில் சிக்குண்ட வனாகவே இருக்கின்றான். காலையில் எழுந்தது முதல் இரவில் நித்திரைக்குச் செல்லும் வரையில் பெரும்பாண்மையான மக்களின் மனதில் கவலைகள் நிறைந்து, நிம்மதி இழந்தே காணப் படுகின்றன. அவர்கள் எப்பொழுதும் மன அமைதிக்காக ஏங்குகின்றனர். அதனை அடைந்து கொள்வதற்றகாகப் பலரும் பல வழிகளிலும் முயன்ற போதிலும் அவை உரிய பலனைத் தந்ததாகத் தெரியவில்லை.

உண்மையில் மன அமைதி என்பது அல்லாஹ்வை நினைவு கூறுவதாலும், அவனின் கட்டளைகளுக்கு அடிபணிவதாலுமே சாத்தியமாகும். எனவே யார் அந்த வழிமுறையினை ஏற்று நடந்தார்களோ, அவர்கள் ஜெயம் பெற்றனர் என்பதற்கு அவர்களின் வாழ்க்கை சாட்சி கூறும்.

மன நிம்மதிக்கு இஸ்லாம் மார்க்கம் தரும் வழி முறைகளைத் தொகுத்து الوسائل المفيدة للحياة السعيدة என்ற பெயரில், அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ் ஸஅதீ அவர்கள் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதனையே அடியேன் “மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு" என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளேன். யாவரும் இதன் மூலம் பயன் பெற அல்லாஹ் அருள் புரிவானாக.

Ymsi.Imam (Rashadi-Bangaloor)

10/11/2015

மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு நன்மை தரும் வழி முறைகள்!

அறிமுகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்

நம் முன்னுள்ள இம்மடல், மனித சார்புகளை விட்டும் நீங்கி அல்குர்ஆன், அல்ஹதீஸ்களின் அடிப்படையில் உண்மையான மகிழ்ச்சியையும், ஈடேற்றத்தையும் தேடும் மனிதனுக்குத் தேவையான திட்டங்களை முன் வைக்கின்றது. உண்மையில் எல்லா விசுவாசிகளும் இந்த மகிழ்ச்சியினையே வெகுவாக எதிர்பார்க்கின்றனர். இஸ்லாமிய சமூகம் அவ்வாறான ஒரு சூழலில் வாழ்வதையே விரும்புகின்றது. ஏனெனில் இத்தகைய வழி ஒன்றின் மூலம்தான் அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், அவனின் திருப்தியையும் அடைவதற்கு ஏற்ற வழிவகை களைச் செய்ய முடியும்.

இம்மடலின் ஆசிரியர், அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் பின் அப்துல்லாஹ் அஸ்ஸஅதீ, என்ற மாபெரும் அறிஞர் ஸவுதி அரேபியாவின் அல் கஸீம் மாகாணத்தின், உனைஸா எனும் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் சிறு பிராயத்திலேயே அவரின் தந்தை இறையடி ஏகினார். இருப்பினும் அவரிடம் விவேகமும், கல்வியின் பால் தேட்டமும் நிறைந்து காணப்பட்டன. எனவே அவர் தன்னுடைய சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட ஆரம்பித்தார். தனது பண்ணிரண்டாவது வயதில் அதனை முற்றாகத் திறம்பட மனனம் செய்து முடித்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் அறிஞர்களிடமும், தன் ஊருக்கு வருகை தந்த வெளியூர் அறிஞர்களிடமும் பல்வகை கலைகளையும், கல்வியையும் அவர் கற்கலானார். அவருடைய அயராத இந்த முயற்சியின் பயனாக கல்வி ஞானத்தின் பெரும் பாக்கியத்தையும், அந்தஸ்தையும் அடையப் பெற்றார்.

மேலும் அவர் தன் இருபத்து மூன்றாம் வயதில் கற்பிக்கும் பணியைத் ஆவம்பித்தார். அப்போதும் அவர் கல்வியை மேலும் தேடுவதிலும், அதனை அபிவிருத்தி செய்து அதனை வளப்படுத்திக் கொள்வதிலும் தொடர்ந்தும் ஆர்வம் காட்டி வந்தார். இவ்வாறு அவர் தன்னுடைய ஆயுட் காலத்தை அறிவுப் பணிக்காகவே அர்ப்பணம் செய்தார். எனவே இவரின் அறிவின் மூலம் பயணடைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவருக்குக் கல்வியூட்டிய ஆசான்களில் முக்கியமாக இருவரைக் குறிப்பிடலாம்:

1:அஷ்ஷெய்க் இப்றாஹீம் பின் ஹம்து பின் ஜாஸிர் என்பவர். இவர் அன்னாரின் ஆரம்ப ஆசான் ஆவார்.

2: “உனைஸா"வில் நீதிபதியாகக் கடமையாற்றிய அஷ்ஷெயக் ஸாலிஹ் பின் உஸைமீன். இவரிடமிருந்து அல் உஸூல், அல் பிக்ஹு, அத்தௌஹீத், தப்ஸீர், அறபு மொழி போன்ற கலைகளைக் அவர் கற்றுத் தேர்ந்தார். மேலும் தன் ஆசானின் இறுதி காலம் வரை அவரின் சாவகாசத்துடன் இருந்த வந்தார். இவ்வாறு தன் ஆசானிடம் கல்வி ஞானம் பெற்றுத் தேர்ந்த ஷெய்க் அப்துர் ரஹ்மான் அவர்கள் பிக்ஹு கலையிலும், உஸூலுல் பிக்ஹிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றிருந்தார். அது மாத்திரமின்றி தௌஹீத் சம்பந்தமான நூல்களில், குறிப்பாக இப்னு தைமிய்யா, இப்னுல் கையிம் (ரஹ்) ஆகியோரின் ஆக்கங்களில் அதிகக் கவணம் செலுத்தி வந்தமையால் தௌஹீத் விடயத்திலும் அன்னாருக்கு பூரண பரிச்சயம் இருந்தது. அவ்வாறே தப்ஸீர் கலையையும் கற்றுத் தேர்ந்த அன்னாருக்கு அத்துரையிலும் அதிக ஈடுபாடிருந்தது. எனவே தப்ஸீரிலும், ஏனைய துரைகளிலும் பல நூல்களை அவர் எழுதினார். அவற்றின் விவரம் வருமாறு:

*தப்ஸீர் துரை நூல்கள்

1:تيسير الكريم الرحمن في تفسير كلام المنان (ثمانية أجزاء)

2:تيسير اللطيف المنان في خلاصة تفسير القرآن

3:القواعد الحسان لتفسير القرآن

கால நேர பராமரிப்புப் பற்றிய நூல்கள்

4:الإرشاد إلى معرفة الأحكام

5:الرياض الناضرة

6:بهجة قلوب الأبرار

7:منهج السالكين

8:حكم شرب الدخان

9:الفتاوى السعدية

10:خطب منبرية

11:الحق الواضح المبين

12:توضيح الكافية الشافية

இவை தவிர்ந்த பிக்ஹு, தௌஹீத், உஸூல், சமூக ஆய்வுகள் மற்றும் மார்க்கத் தீர்ப்புக்கள் சம்பந்தமான பத்வாக்கள் பற்றிய ஆக்கங்கள் என இன்னும் பல நூல்கள் எழுதியுள்ளார்.

இவ்வாறு கல்விப் பணியில் தன் ஆயுளின் பெரும் பகுதியைக் கழித்த ஷெய்க் அவர்கள் திடீர் என கடும் சுகவீனத்திற்கு இலக்கானார். அது அன்னாரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. ஹிஜ்ரீ 1376 ம் ஆண்டு, ஜமாதுல் தானீ, 23ம் தியதி வியாழக்கிழமை உனைஸா நகரில் அன்னவரின் உயிர் பிரிந்தது. ஷெய்க் அவர்களைப் பற்றி அறிந்த, கேள்வியுற்ற சகலரின் மனதிலும் அது ஆழமான தாக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. அல்லாஹ் தன் அருளை அன்னாருக்குத் தாராளமாகத் தந்தருள் வானாக. மேலும் அன்னாரின் அறிவின் மூலம் நாமும் பயன் பெற அருள் பாளிப்பானாக. ஆமீன்.

_____________________________________________

ஆசிரியரின் முன்னுரை

புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனை யன்றி யாரும் இல்லை என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி பகர்கின்றேன். கருணையும் சாந்தியும் அன்னார் மீதும், அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும் உண்டாவதாக.

நிச்சயமாக மனிதன் தன் மனக் கவலைகள் நீங்கி, நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டு மென்பதையே விரும்புகிறான். மன அமைதி மூலம் தான் வாழ்வு நலம் பெறும், முகமலர்ச்சி உண்டாகும். இதனை மார்க்க வழிமுறைகள், இயற்கை வழிமுறைகள், மற்றும் அனுஷ்ட்டான வழிமுறைகள் என பல அணுகு முறைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இவை அனைத்தையும் ஒருங்கே அடையப் பெறும் வாய்ப்பு ஒரு முஃமினுக்கேயன்றி வேறு எவருக்கும் கிட்டாது. ஆயினும் ஏனையோர் இவற்றில் ஏதாகிலும் ஒரு அணுகு முறையை அடையப் பெறலாம். அது அவர்களின் சிந்தனை மூலம் கண்டறிந்த ஒரு வழியாகவும் அமையலாம். எனினும் அது பூரணப் பயணைத் தராது. அத்துடன் பூரணப் பயணைத் தரக்கூடிய மிகவும் சிறந்த வழிமுறையைப் பெறும் வாய்ப்பையும் அவர்கள் இழந்து விடுவர்.

எந்த உயர்ந்த இலட்சியத்தை அடையும் பொருட்டு மக்கள் அலைகின்றனரோ, அதனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் என் மனதில் தோன்றிய சில காரியங்களை இந்த மடல் மூலம் முன் வைக்க விளைகின்றேன்.

இந்த வழிமுறைகளை ஏற்று செயல்பட்ட சிலர் மகிழ்ச்சியான, சிறந்த வாழ்க்கையினை அனுபவித் தனர். மேலும் சிலர் அதனை முற்றிலும் புறக்கணித்தனர். அதன் காரணமாக அவர்கள் துரதிஷ்டமான நெருக்கடியான வாழ்க்கையை எதிர் கொண்டனர். இன்னும் சிலர் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களின் பிரகாரம் இரண்டுக்கும் இடைப் பட்ட நிலையில் இருந்தனர். எவ்வாறாயினும் நற் கருமங்களைச் செய்யவும் தீய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளவும் வாய்ப்பும் உதவியும் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. ஆகையால் நம்மனைவருக்கும் அவன் துணை புரிவானாக.

_____________________________________________

மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஈமானும் நற் கருமங்களுமே அடிப்படைக் காரணங்கள்

இவற்றை அடைய முக்கிய அடிப்படைக் காரணிகளாக விளங்குபவை ஈமானும் ஸாலிஹான அமல்களுமே. இதனை அல்லாஹ்வின் வாக்கு இவ்வாறு இயம்புகிறது.

مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ﴿٩٧/النحل﴾

“ஆண் அல்லது பெண் – அவர் விசுவாசம் கொண்டவராக இருக்க, யார் நற்செயலை செய்தாரோ நிச்சயமாக நாம் அவர்களை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியையே அவர்கள் செய்துக் கொண்டிருந்தவற்றில், மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம். (16:97)

இவ்வசனத்தின் மூலம் யார் ஈமானும் நற்செயல்களும் உடையவராக இருக்கின்றாரோ, அவருக்கு இவ்வுலகில் நல்வாழ்வையும், இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியையும் தருவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். நற்செயலுக்குப் பயன் தரக்கூடிய, மற்றும் உள்ளத்தையும் பண்புகளையும் சீர்படுத்தக்கூடிய சரியான ஈமானைப் பெற்ற முஃமின்களிடம் இந்த அடிப்படை காரணிகள் இருக்கின்றபடியால், அவர்கள் ஈருலகிலும் மகிழ்ச்சியையும் முக மலர்ச்சியையும் தருகின்ற, மற்றும் துக்கம் துயரங்களை அகற்றுகின்ற வழிமுறைகளை அடையப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

நிச்சயமாக ஒரு முஃமின் எதிர் கொள்ளும் சந்தோஷங்கள், வெறுப்பூட்டும் விடயங்களின் ஊடாக அவனின் சம்பாத்தியமும், நலன்களும் இரட்டிப்படையும் என்பதை அடுத்து வரும் நபி மொழியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"قال رسولُ اللهِ صلى الله عليه وسلم:" عَجَبًا لأمرِ المؤمنِ إِنَّ أمْرَه كُلَّهُ لهُ خَيرٌ وليسَ ذلكَ لأحَدٍ إلا للمُؤْمنِ إِنْ أصَابتهُ سَرَّاءُ شَكَرَ فكانتْ خَيرًا لهُ وإنْ أصَابتهُ ضَرَّاءُ صَبرَ فكانتْ خَيرًا لهُ ". رواهُ مُسْلِمٌ.

“முஃமினின் காரியங்கள் அனைத்தும் விசித்திர மானவை. முஃமினான அடியானின் எல்லா காரியங்களும் நன்மை பயக்கக் கூடியவையே. இது முஃமினைத் தவிர வேறு எவருக்கும் சாத்திய மாகாது. ஏனெனில் அவனுக்கு மகிழ்ச்சி தரும் காரியம் ஏதும் நேரிட்டால், அவன் நன்றி செலுத்துவான். அப்பொழுது அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடும். மேலும் அவனுக்கு தீமை ஏதும் ஏற்பட்டாலோ, பொறுமையை கடைப்பிடிப்பான். அப்பொழுது அதுவும் அவனுக்கு நன்மையாக ஆகிவிடும்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.(முஸ்லிம்)

மேலும் இதிலிருந்து முஃமின், அவனின் ஈமானினதும், அமல்களினதும் ஏற்றத் தாழ்வுகளுக் கேற்ப அவன் நன்மை தீமை இரண்டு விடயங்களையும் சந்திக்கின்றான் என்பதைக் காண முடிகின்றது. எனவே இவ்விரு நிலைகளையும் ஏற்றுக் கொள்ளும் பண்பைப் பெற்றவன், நாம் குறிப்பிட்டது போல அவன் தனக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், பொறுமை மூலமும் எதிர் கொள்வான். அதனால் அவன் வாழ்வில் மகிழ்ச்சியும், முகமலர்ச்சியும் ஏற்படும். மேலும் அவனின் துக்கம் துயரம் நீங்கும். அவனின் மன உளைச்சலும் துரதிஷ்டமும் விழகி அதனைத் தொடர்ந்து அவனின் உலக வாழ்வு வளம் பெறும்.

ஆனால் இதற்கு மாறாக முஃமினல்லாதவன் தான் விரும்பியதை அடையும் போது, அதனை அவன் அகங்காரத்துடனும், நன்றி கேடான நிலையிலுமே எதிர் கொள்வான். அதனால் அவனின் குணங்கள் மேலும் மோசமடையும். மிருகங்களைப் போன்று பேராசையும், உலக இச்சையும் அவனிடம் அதிகரிக்கும். அவனின் மனம் ஒரு போதும் சாந்தியடையாது. மாறாக அவனுக்குப் பல நெருக்கடிகள் உண்டாகும். தான் பெற்ற அபிலாஷைகள் நீங்கி விடுமோ என்ற அச்சம் அவனை வாட்டும். அதனால் பல முரண்பாடுகளை அவன் சந்திப்பான். அவனின் மனம் ஒரு போதும் திருப்தியடையாது. ஆகையால் மேலும் பல விடயங்களின் மீதும் அவனுக்கு மோகம் அதிகரிக்கும். சில வேளை அவன் அபிலாஷையை அடையலாம், அல்லது அடையாமல் இருக்கலாம். அப்படி அதனை அவன் அடைந்து கொண்டாலும், அவனின் கவலை அவனை விட்டும் அகலாது. இது இவ்வாறிருக்க வெறுப்பூட்டும் சம்பவங்கள் அவனைக் குறுக்கிடும் போது அதனைக் கவலையுடனும் அச்சத்துடனுமே அவன் எதிர் கொள்வான். அவன் வாழ்வில் ஏற்படும் துரதிஷ்டத்தையும், மன அழுத்தத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை. இத்தகைய அச்சங்களுக்கு இலக்காகும் அவன், சில வேளை மிகவும் மோசமான நிலைகளுக்கும், நெருக்கடி களுக்கும் ஆலாகலாம். இவற்றை நல்ல கருமங்கள் மூலம் நன்மையை ஈட்டிக் கொள்ள வேண்டு மென்ற எண்ணமும், கஷ்டத்தைச் தாங்கிக் கொள்ளும் பொறுமையும் அவனிடம் இல்லாததன் விளைவே இது.

இவை யாவும் அனுபவத்தில் தெரிகின்றவை. இப்படிப்பட்ட ஒருவரை சக மனிதர்களின் நிலையோடு நீங்கள் ஒப்பிட்டு நோக்கினால், ஈமானின் ஜோதியுடன் செயலாற்றும் ஒரு முஃமினுக்கும், அதற்கு மாறான இன்னொரு வனுக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் இஸ்லாமிய மார்க்கமானது அல்லாஹ், தன் அடியார்களுக்கு வழங்கிய அருட்கொடை எதுவாக இருந்தாலும் அதனை அடியான் பூரண திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத் தூண்டி வருகின்றது.

எனவே யாவரும் இலக்காகும் நோய், வறுமை போன்ற சோதனைகள் ஒரு முஃமினை எதிர் கொள்ளும் போது, அவன் தான் பெற்றுள்ள ஈமானின் காரணமாகவும், அல்லாஹ் தனக்கு அளித்துள்ள திருப்தியடையும் மனோ பாவத்தின் காரணமாகவும் அந்த சோதனைகளை அவன் தன் கண் குளிர்ச்சிக்கான காரணங்களாகவே காண்பான். எனவே தன்னால் அடைய இயலாத ஒன்றைத் தேடமாட்டான். மாறாகத் தன்னை விட தாழ்ந்த நிலையில் இருப்பவனை அவதானிப் பானே யன்றி, தன்னிலும் மேல் நிலையில் இருப்பவனை அவதானிக்க மாட்டான். சில வேளை உலக வசதி வாய்ப்புக்கள் யாவும் கிடைக்கப் பெற்ற ஒருவன், திருப்தியற்ற நிலையில் இருப்பதை அவன் காணும் பட்சத்தில், அவனுக்கு தன் நிலை கண்டு மேலும் சந்தோசமும், முகமலர்ச்சியும் அதிகரிக்கும்.

ஆனால் ஈமானின் பிரகாரம் கரும மாற்றாதவனின் நிலையோ, அவன் ஏதாகிலும் ஒரு நோயால் சோதிக்கப்படும் போது, அல்லது உலகத் தேவை எதனையும் அவன் இழக்கும் போது அவன் அழிவினதும், துரதிஷ்டத்தினதும் விளிம்பில் இருப்பதைக் காண்பீர்கள்.

இன்னொரு உதாரணத்தைக் கவணிப்போம். ஏதேனும் பயங்கர சம்பவம் நிகழும் போதும், மனிதர்களை நெருக்கடிகள் வந்து சேரும் போதும் சரியான ஈமானைப் பெற்றவனின் மனம் உறுதியாகவும் அமைதியாகவும் இருக்கக் காண்பீர்கள். மேலும் தன்னிடமிருந்து மறைந்து போன அந்த செல்வாக்கு, சிந்தனை, வாக்கு வன்மை, செயற் திறன் என்பவற்றை மீண்டும் நிர்வகித்து அவற்றை மறுபடியும் நடை முறைப் படுத்தும் தகைமையும் வலிமையும் அவனிடம் இருக்கவும் காண்பீர்கள். இதுவெல்லாம் நெருக்கடி களைத் தாங்கும் மனவலிமை அவனிடம் இருக்கின்ற படியால்தான். இத்தகைய நிலைதான் மனிதனுக்கு ஆறுதலையும், மன உறுதியையும் தர முடியும்.

ஆனால் ஈமானை இழந்தவனின் நிலையோ மாறுபட்டது. அச்சமும் பீதியும் ஏற்படுகின்ற போது அவனின் மனம் உடைந்து விடும். அவனின் நாளங்கள் இறுகி விடும். அவனின் சிந்தனைகள் சிதறி விடும். அவனுள்ளே பயமும் பீதியும் குடி கொள்ளும். மேலும் அவனின் அகத்திலும் புரத்திலும் அச்சமும் கவலையும் வியாபிக்கும். அவனின் இந்த நிலையை வார்த்தைகளால் வடிக்க இயலாது. இப்படிப்பட்டவர்கள் தங்களின் நெருக்கடிகளை அகற்றுவதற்கு இயற்கையான பயிற்சி முறைகள் மூலம் வழி காணாது போனால், அவர்களின் மனப்பலம் அழிந்து விடும். அவர்களின் இரத்த நாளங்கள் இறுகி விடும். இதுவெல்லாம் அவர்களிடம் எதையும் தாங்கும் ஈமானிய பொறுமை இன்மையாலாகும். குறிப்பாக கவலையும் நெருக்கடிகளும் மிகுந்த நேரத்தில் இந்தப் பலவீனம் அவர்களிடம் மேலோங்கிக் காணப்படும்.

முயற்சி மூலம் வீரத்தை அடையப் பெறும் விடயத்தில் நல்லவனும் கெட்டவனும், முஃமினும் காபிரும் சமமானவர்கள். இத்தகைய வீரத்தின் மூலம் பயங்கரங்களை இலகுவானவையாகவும், அற்பமாகவும் காணலாம். ஆனால் ஒரு முஃமினை பொருத்த வரை, அவனின் பலமான ஈமான், பொறுமை, அல்லாஹ்வின் மீதான அவனின் தவக்குல், நம்பிக்கை, மற்றும் அல்லாஹ்விட மிருந்து நற் கூலியை எதிர்பார்த்தல் என்பவற்றின் காரணமாக அவனின் வீரம் மேலும் அதிகரிக்கும். பயத்தின் அழுத்தம் அவனிடம் தணிந்து விடும். இவ்வாறு பல வகையிலும் அவன் சிறப்புற்று விளங்குவான். இனி அல்லாஹ் கூறுவதைக் கவணியுஙகள்.

إِن تَكُونُوا تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ ۖ وَتَرْجُونَ مِنَ اللَّـهِ مَا لَا يَرْجُونَ ۗ(النساء/104)

“நீங்கள் துன்பமடைந்தது போன்று அவர்களும் துன்பம் அடைவர். மேலும் அவர்கள் ஆதரவு வைக்காததை (நற்கூலியை) அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள்." (4:104)

துக்கம் துயரங்களை அகற்றும் மற்றுமொரு காரணமாக விளங்குவது, சொல்லாலும் செயலாலும் ஏனைய வழிகளாலும் சிருஷ்டி களுக்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்வதாகும். நல்லவராயினும் கெட்டவராயினும் அவர்கள் மேற்கொள்ளும் உதவி உபகாரங்களின் அடிப்படையிலேயே அவர்களின் துயரங்களை அல்லாஹ் அகற்றுகிறான். ஆனால் முஃமினைப் பொருத்த வரை அவன் உதவி உபகாரங்களைச் செய்கின்ற போது அதனை அவன் உளத் தூய்மையுடனும் அல்லாஹ்விடம் பிரதிபலனை எதிர்பார்த்தவனாகவுமே செய்கின்றான். அதனால் நல்ல காரியத்தைச் செய்வதும், தீய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதும் அவனுக்கு இலகுவாகி விடுகின்றன. அல்லாஹ் அதனை அவனுக்கு இலகுவாக்கித் தருகின்றான். அல்லாஹ் தன் அருள் மறையில் இவ்வறு கூறுகிறான்,

لَّا خَيْرَ فِي كَثِيرٍ مِّن نَّجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّـهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا ﴿١١٤/النساء﴾

“தர்மத்தை பற்றி அல்லது நன்மையாவற்றைப் பற்றி மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்து வதைப் பற்றி ஏவியரைத் தவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலான வற்றில் யாதொரு நன்மையுமில்லை. மேலும் எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, அதை செய்தால் நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியை தருவோம். (4:114) என்று கூறுகிறான்

அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் அடியானின் இந்த கருமங்கள் யாவும் நல்ல காரியங்களே என்றும், நல்ல காரியம் நல்லதைக் கொண்டு வரும், மேலும் அது தீமைகளை விட்டும் தடுக்கும் என்றும், அல்லாஹ்விடம் பிரதி பலனை எதிர்பார்க்கும் முஃமினான அடியானுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தருவான் என்றும் அறிவிக்கின்றான். மேலும் அடியானின் துக்கம் துயரங்களையும், அகத்தின் அழுக்குகளையும் இல்லாது ஒழிப்பதும், அல்லாஹ் வழங்கும் மகத்தான கூலியில் ஒன்றுதான் என்பது இவ்வசனத்தின் மூலம் புலனாகின்றது.

நல்ல காரியங்களிலும், பயனுள்ள அறிவு சார்ந்த விடயங்களிலும் கவணம் செலுத்தல்.

நல்ல காரியஙகளிலும் பயனுள்ள அறிவு சார்ந்த விடயங்களிலும் கவணம் செலுத்துவது, நரம்புத் தளர்ச்சி, மற்றும் அசுத்தமான விடயங்களில் உள்ளம் ஈடுபாடு கொள்ளுதல் காரணமாக உண்டாகும் மனக்கவலைகளைப் போக்குவதற்கு ஏற்ற சிறந்த காரணிகளாகும். எனவே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதில் குடி கொண்டுள்ள கவலையை நீக்கலாம். மேலும் இவ்வாறு கவலை மறக்கடிக்கப்படும் பட்சத்தில் உள்ளம் மகிழ்ச்சியடையும். அதனால் உட்சாகமும் அதிகரிக்கும். இந்த அணுகு முறையானது காபிருக்கும், முஃமினுக்கும் பொதுவானது. எனினும் முஃமினான அடியான் கற்கின்ற போதும், கற்பிக்கின்ற போதும், அல்லது அவன் ஒரு காரியத்தைச் செய்கின்ற போதும் அவனிடமுள்ள ஈமானின் காரணமாக அவன் ஏனையவர்களை விட வித்தியாசமாக சிறப்புற்று விளங்குவான். மேலும் அவன் மேற் கொள்ளும் காரியம் இபாதத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் எனில் அதுவொரு இபாதாவாகவே அமைந்து விடும். அவ்வாறின்றி அது உலக விவகாரமாகவோ, மரபு சார்ந்த விடயமாகவோ இருப்பின், அவன் அதனை நல்லெண்ணத்துடனும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும் செய்கின்ற படியால் அதுவும் ஒரு இபாதத்தாக மாறிவிடும். ஆகையால் முஃமினின் இத்தகைய செயல் அவனின் மனக் கவலையையும், துக்கம் துயரங்களையும் அகற்றுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக மனக் கவலையும், மாசுபட்ட உள்ளமும் கொண்டவர்கள் பலதரப்பட்ட உள நோய்களுக்கு ஆளாகின்ற போது, அவர்கள் முக்கியமான காரியங்களில் கவணம் செலுத்தி, தங்களுக்குக் கவலை தரும் காரியத்தை மறக்கச் செய்வது அவர்களுக்குப் பயன் தரும் மாமருந்தாகும்.

எவ்வாறாயினும் இத்தகைய காரியங்களில் ஈடுபாடு கொள்ளும் போது மனதுக்கு இணக்கமான, அது விரும்பும் காரியங்களைச செய்வதே சிறந்த பயனைத் தரும்.

கவலைகள் நீங்க மற்றொரு காரணம் அன்றாட காரியத்தில் தன்னுடைய முழுக் கவணத்தையும் சிந்தனையையும் செலுத்துவதாகும். அத்துடன் நிறைவேறாமல் போன, காலம் கடந்த விடயங்களைப் பற்றி கவலைப் படுவதைத் தவிர்ப்பது அவசியம். ஆகையால் தான் ரஸூல் (ஸல்) அவர்கள் கவலையை விட்டும் அல்லாஹ் விடம் பாதுகாவல் தேடினார்கள். ஏனெனில் நடந்து முடிந்த கருமங்களைப் பற்றிக் கவலை அடைவதில் பயனில்லை. அது திரும்பவும் வரப்போவதும் இல்லை. அவ்வாறே எதிர் காலத்தைப் பற்றி பீதி அடையவும் கூடாது. அதன் மூலம் கவலை தான் அதிகரிக்கும். எனவே அடியான் அவனின் அன்றாட காரியத்தின் மீது தன்னுடைய முழுக் கவணத்தையும் செலுத்துவது அவசியம். இவ்வாறு தன்னுடைய வழமையான காரியங்களை அவன் செம்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.

இவ்வாறு மனதை ஒரு முகப்படுத்துவதன் மூலம் காரியங்களை பரிபூரணமாக நிறைவேற்றவும் கவலைகளை விட்டும் அடியான் நிம்மதி பெறவும் இயலுமாகும். எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிராத்தனை செய்யும் வேளையில், அல்லது பிரார்த்தனை புரியும்படி தன் சமுதாயத்திற்கு வழி காட்டும் போது தம் வேண்டுகோலைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவ்விடயத்தில் மிகுந்த பிரயாசையை வெளிப் படுத்தி அல்லாஹ்வின் உதவியைக் கோருமாரும், அல்லாஹ்வின் அருளின் மீது ஆசை கொள்ளுமாரும், மற்றும் வேண்டுகோலுக்குத் தடையாகவுள்ள காரியங்களைத் தவிர்ந்து கொள்ளுமாரும் தூண்டினார்கள். ஏனெனில் பிரார்த்தனை, காரியத்துடன் தொடர்புப் பட்டிருப்பது இன்றியமையாத தாகும். எனவே மார்க்க விடயத்திலும், உலக விடயத்திலும் பயன் தரும் காரியத்திலேயே அடியான் முயற்சித்தல் வேண்டும். மேலும் தன் நோக்கம் கைகூட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதை மறக்கவும் கூடாது. இதனையே நபி (ஸல்) அவர்களின் வாக்கு இவ்வாறு குறிப்பிடுகின்றது.

احرص على ما ينفعك واستعن بالله ولا تَعْجَز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا، كان كذا وكذا، ولكن قل قدَّر الله وما شاء فعل فإن لَوْ تفتح عمل الشيطان" رواه مسلم.

“உனக்குப் பயன் தரும் விடயத்தில் ஆர்வம் கொள். அதற்கு அல்லாஹ்வின் உதவியைத் தேடு. பலத்தை இழந்து விடாதே. மேலும் ஏதாகிலும் உனக்கு நேர்ந்தால், “நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும்" என்று சொல்லாதே. எனினும் அல்லாஹ், அவன் நிர்ணயித்தபடி அவன் நாடியதைச் செய்தான், என்று கூறுவீராக. ஏனெனில் 'அப்படிச் செய்திருந்தால்' என்ற கூற்று ஷைத்தானின் விவகாரத்தை ஆரம்பிக்கும்படி செய்து விடும்." (முஸ்லிம்)

ஒரு காரியம் வெற்றி பெற அவ்விடயத்தில் ஆர்வமும், அல்லாஹ்வின் உதவியும் தேவை. மேலும் அதில் சோம்பல் காட்டக் கூடாது. நடந்து முடிந்ததை எண்ணி கவலை கொள்ளவும் கூடாது. மாறாக அல்லாஹ்வின் எண்ணத்தின் பிரகாரமே அது நடந்தேறியது என அதனை திருப்தியுடன் ஏற்று கொள்ள வேண்டும், என்பதை நபியவர் களின் இந்த வாக்கு தெளிவு படுத்துகின்றது.

மேலும் நபியவர்கள், ஒரு காரியத்தை இரண்டு வகைகளாக வகுத்துள்ளார்கள் என்பதும் இதிலிருந்து புலனாகிறது. ஒன்று அடியான் தன் முயற்சி மூலம் அடைய அல்லது தவிர்ந்து கொள்ளக் கூடிய விடயம். இவ்விடயத்தில் தன் முயற்சியை வெளிப்படுத்தும் அதே சமயம் அல்லாஹ்வின் உதவியைத் தேடுவதும் அவசியம். இரண்டாவது அவ்வாறு அடைய முடியாதவை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை அடியான் ஆறுதலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிருப்தி அடையக்கூடாது. இந்த ஒழுங்கு முறையை அடியான் பேணி வருவானாகில் அவனின் கவலைகள் நீங்கும். அவனின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இதில் எந்த ஐயமும் இல்லை.

அல்லாஹ்வை நிதமும் நினைவு கூறல்

உள்ளத்தின் கவலைகள் நீங்கி மலர்ச்சியையும், அமைதியையும் பெற்றுத் தரும் இன்னொரு வழி அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுவதாகும்.

أَلَا بِذِكْرِ اللَّـهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ﴿٢٨/الرعد﴾

“அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்திக் கொள்வீகளாக'"(13:28)

அல்லாஹ்வை நினைவு கூறுவதும், அவனின் பெயரை துதி செய்வதும் நோக்கத்தையும், தேவைகளையும் பெற்றுத் தருவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதை இத்திரு வசனம் தெளிவு படுத்துகின்றது.

மேலும் அல்லாஹ் தமக்களித்துள்ள வெளிப்படை யான, மறைவான நிஃமத்துக்களைப் பற்றி பிரஸ்தாபிப்பதும் கவலைகளை நீக்கும் மற்று மொரு வழியாகும். இதன் மூலம் அவனின் கவலையை அல்லாஹ் நீங்கும் படி செய்கிறான். எனவே மிகவும் மேலான நன்றி செலுத்தும் காரியத்தை அடியான் செய்து வரவேண்டுமென அவனை அல்லாஹ் தூண்டுகின்றான். அடியானை வறுமை, நோய் போன்ற சோதனைகள் பீடிக்கின்ற போதும் கூட அவற்றை அல்லாஹ் தனக்கு தந்துள்ள அளவிலா அருட் கொடைகளுடன் அவன் ஒப்பிட்டு பார்ப்பானாகில், தனக்கேற்பட்டிருக்கும் நெருக்கடிகளை அவன் கனமற்றதாகக் காண்பான்.

எனவே நெருக்கடிகளைக் கொண்டு அடியானை அல்லாஹ் சோதிக்கின்ற வேளையில், அவன் அதனை பொறுமையுடன் ஏற்றுக் கொள்வானா கில், அதன் அழுத்தம் அவனை விட்டும் நீங்கும். மேலும் அச்சந்தர்ப்பத்தில் அதற்காக அல்லாஹ் விடம் அவன் கூலியையும், பிரதி பலனையும் எதிர்பார்ப்பதும், பொறுமையுடன் அதனை ஏற்றுக் கொள்வதும் கசப்பை இனிப்பாக மாற்றிவிடும். மேலும் அந்த இனிப்பானது பொறுமையின் கசப்பை மறக்கச் செய்திடும்.

தன்னை விட கீழ் நிலையில் இருப்போரை அவதானித்தல் வேண்டும்

இது பற்றி நபியவர்கள் கூறும் போது

: " انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم ، فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم "

“உங்களை விட கீழ் நிலையில் இருப்பவனைப் பாருங்கள். உங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவனைப் பார்க்காதீர்கள். ஏனெனில் இதுவே நீங்கள் அல்லாஹ்வின் நிஃமத்துக்களை அற்பமாக காணாமல் இருக்க மிகவும் பொருத்தமானது." (புகாரீ, முஸ்லிம்) என்று கூறினார்கள்.

இந்த மேலான முறையை அடியான் அனுசரித்து நடப்பானாகில் அவன் ஏனைய மனிதர்களை விடவும் தன்னை உயர்வாகக் காண்பான் என்பது நிச்சயம். அப்பொழுது அவனுடைய நிலை எப்படி இருந்த போதிலும் உடல் ஆரோக்கியத்திலும், ஆகாரத்திலும் தன்னுடைய நிலை எத்தனையோ பேர்களை விடவும் மேலோங்கி இருக்கக் காண்பான். அதனால் அவனின் கவலைகள் நீங்கி அவனுக்கு சந்தோசம் அதிகரிக்கும். மேலும் தன்னிலும் உயர்ந்தவர்களை அவன் காணும் போது அவர்களைப் பற்றிய பொறாமையும் அவனுக்கு ஏற்படாது.

இவ்வாறு அல்லாஹ் தனக்களித்துள்ள வெளிப் படையான, மறைவான நிஃமத்துக்களையும் மற்றும் மாக்க விடயத்திலும், உலக விடயத்திலும் அல்லாஹ் தனக்களித்துள்ள அருட்கொடை களையும் பற்றி அடியான் எப்பொழுதும் சிந்திக்கின்ற போது, தனக்கு அல்லாஹ் நிஃமத்துக்களை நிறைய தந்துள்ளான் என்பதையும் பலதரப்பட்ட தீமைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துள்ளான் என்பதையும் அவன் காண்பான். இதனால் அவனின் கவலைகள் நீங்கி அவனுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

கவலை தரும் காரியங்களைத் தவிர்த்தல்

கவலைகள் நீங்கி மகிழ்ச்சியேற்பட மற்றுமொரு வழியாக விளங்குவது, கவலை ஏற்படுத்தும் விஷயங்களை மனதை விட்டும் நீக்கிவிடுவதாகும்.

கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்பட மற்றுமொரு வழி மனதை விட்டும் கவலை தரும் காரியங்களை அகற்றுவதாகும். கடந்த காலங்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை. எனவே அது பற்றிச் சிந்திப்பது வீண். மேலும் அது மடமையும் பைத்தியமுமாகும். ஆகையால் இவற்றை மறந்து விட வேண்டும். இதனால் மகிழ்ச்சி பெற வழி பிறக்கும். இத்தகைய விடயங்களை மறக்க மனதுடன் போராடுவது அவசியம். மேலும் ஒரு காரியத்தில் இறங்கும் போது அதனால் எதிர் காலத்தில் வறுமை அல்லது ஏதேனும் நோய்களுக்கு தான் முகம் கொடுக்க நேரிடுமோ என்று கற்பனை செய்யக் கூடாது. ஏனெனில் எதிர்காலத்தைப் பற்றிய அறிவு அல்லாஹ் ஒருவனிடமே உண்டு. எனவே அது பற்றி வீணாக சிந்திக்காது, நல்லதை அடையவும், தீயவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளவும் முயற்சி செய்வதே அடியானின் பொறுப்பு. மேலும் எதிர் காலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அதன் பொறுப்பை அல்லாஹ் விடம் ஒப்படைத்து விட்டு அமைதி யுடன் காரியத்தில் ஈடுபடல் வேண்டும். அப்பொழுது மனம் ஆறுதல் அடையும், நிலைமைகள் சீரடையும், கவலைகள் நீங்கும் என்பதை அடியான் புரிந்து கொள்வது அவசியம்.

மேலும் எதிர்கால விளைவுகளுடன் தொடர்புள்ள விடயங்களில் கவணம் செலுத்தும் போது ரஸூல் (ஸல்) அவர்கள் ஓதி வந்த இந்த துஆவை ஓதிக் கொள்வது பயன் மிக்கதாகும்.

(َاللَّهُمَّ أَصْلِحْ لِي دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيْهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ)).

“யா அல்லாஹ்! என்னுடைய காரியத்துக்கு பாதுகாப்பைத் தரும் என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீராக்கித் தருவாயாக. என் வாழ்வு அமைந்திருக்கும் எனது உலக விவகாரங்களையும் சீராக்கித் தருவாயாக. மேலும் நான் திரும்பிச் செல்லவுள்ள மறுமையையும் சீராக்கித் தந்தருள் வாயாக. நன்மைகள் செய்வதற்காக என் வாழ்க்கையை அதிகப்படுத்துவாயாக. எல்லா தீமைகளை விட்டும் என் மனதை நிம்மதி பெறச் செய்வாயாக." (முஸ்லிம்)

اَلَّلهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَه إلا أنت. رواه أبو داود

“யா அல்லாஹ்! நான் உன் அருளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றேன். ஒரு நொடியேனும் என்னை என் மனதிடம் சாட்டி விடாது, எனது சகல காரியங்களையும் சீராக்கித் தந்தருள். உன்னைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒருவனும் இல்லை. (அபூ தாவூத்)

எனவே அடியான் தன் காரியங்களில் முயற்சி செய்யும் வேளையில், மார்க்கம் மற்றும் உலக விவகாரங்களின் எதிர்கால நலன்களை உள்ளடக்கிய இந்த பிரார்தனைகளை தூய எண்ணத்துடன் ஓதி வருவானாகில் அவனின் எண்ணத்தை அல்லாஹ் அநுகூலமாக்கித் தருவான், தன்னிடம் அவன் கேட்டதையும் தந்தருள்வான். அப்போது அவனின் கவலைகள் சந்தோஷங்களாக மாறிவிடும்.

மேலும் பேரிழப்புக்கள் ஏற்படும் போது அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனப் பலத்தை பெறுவ தற்காக, சாதாரண அவலங்களை இலேசானவை யாகக் காண்பதுவும் அதற்கு மனதைப் பழக்கப் படுத்திக் கொள்வதும் அவசியம். இவ்வாறு முடிந்த வரையில் எல்லா நெருக்கடிகளையும் இலகுவான வையாக ஆக்கிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அப்பொழுது கவலைகளும் துன்பங்களும் இல்லாமல் போய் விடும். அது மட்டுமில்லாமல் அதற்குப் பதிலாக நன்மைகளைக் கொண்டு வரவும், அடியானுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை நீக்கிக் கொள்ளவும் அல்லாஹ்விடம் வாய்ப்புண்டாகும்.

அடியானை பீதி, நோய், வறுமை, மற்றும் அவனின் விருப்பத்திற்குரிய விடயங்களின் இழப்புக்கள் போன்ற நிகழ்வுகள் பீடிக்கும் போது அவனின் மனம் அதனை அமைதியுடன் ஏற்றுக் கொள்ளும். பின்னர் அதனை விடவும் பெரிய கஷ்டங்கள் வருகின்ற போது அதனையும் அவன் ஏற்றுக் கொள்ளும் மன உறுதி அவனிடம் இருக்கும். ஏனெனில் வெறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மையானது பெரிய துயரங்களை இலகுவாக்கும். அதன் கடுமையைக் குறைக்கும். குறிப்பாக தன் சக்திக்கு உட்பட்ட வரை கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதற்கான பழக்கத்தை ஏற்டுத்திக் கொண்டால், பீடித்துள்ள துன்பங்களின் பால் கவணம் செலுத்த இடம் அளிக்காத, பயனுள்ள இந்த முயற்சி, தீமைகளை எதிர்க்கும் மனப்பலம் ஆகிய இரண்டு தன்மைகளும் அவனிடம் சங்கமிக்கும். அத்துடன் அவனிடம் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை உறுதியாக இருக்கின்றபடியால், அவன் இந்த கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதன் பயனாக, அல்லாஹ்விடம் அவன் உடனுக்குடனான மற்றும் தாமதமான கூலியை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றான் என்பதிலும், அத்துடன் சிறப்பான இவ்வணுகு முறையில் அவனுக்கு மேலும் சந்தோஷத்தையும், மன மலர்ச்சியையும் ஏற்படுத்தத் தக்க பெரும் பயன் உண்டென்பதிலும் சந்தேகமில்லை. இவை அனுபவத்தில் காணப்படும் உண்மைகள். இதனை அனுபவத்தில் கண்டவர்கள் ஏராளம்.

மன, சரீர நோய்களுக்கு சஞ்ஜீவி

மனச் சோர்வுக்கும், தீய கற்பனைகளுக்கும் இடம் தராமலும் அடிபணியாமலும் இருக்கும் மன உறுதி யானது, மன நோய்களுக்கு மாத்திரமின்றி உடல் சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்ற சஞ்சீவியாகும். ஏனெனில் மனிதன் எப்பொழுது வீணான கற்பனைகளுக்கு அடிபணியவும், பீதி, நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் தாக்கங்களுக்கும், துன்பங்களுக்கும், மற்றும் வெறுப்பூட்டும் சம்பவங்களாலும், அவ்வாறே தன்னிடமிருந்து தன்னுடைய விருப்பத்திற்குரிய பொருட்கள் தவறி விடும் போதும் உண்டாகும் கோபத்திற்கும் மனக் குழப்பத்திற்கும் இடமளிக்கின்ற போது, அவை துக்கம் துயரங்களிலும், மன நோயிலும், உடல் நோயிலும் அவனை சிக்க வைத்து விடுகின்றன. மேலும் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சியையும் அவை ஏற்படுத்தி விடுகின்றன.

ஆனால் எப்பொழுது மனிதன் வீணான கற்பனைகளுக்கு இடம் கொடுக்காது, அவன் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து அவனிடம் தன் சகல பொறுப்புக்களையும் ஒப்படைத்து விடுவானோ, அப்பொழுது அவனின் கவலைகள் அவனை விட்டும் அகன்று விடும். மேலும் அவனிடம் குடி கொண்டுள்ள பல வகையான உடல், உள நேய்களும் நீங்கி விடும். அத்துடன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, மனப்பலமும், மன மலர்ச்சியும், மகிழ்வும் அவன் வாழ்வில் ஏற்பட்டு விடும். ஆனால் தீய கற்பனைகளுக்கும், எண்ணங்களுக்கும் அடிமைப் பட்டவர்களின் நிலையோ பரிதாபமானது. அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரி களில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு இதன் தாக்கத்திற்குப் பலவீனர்கள் மாத்திரமின்றி, பலசாளிகளும் இலக்காகியுள்ளனர். மேலும் பலர் பைத்தியங்களாக ஆகியுள்ளனர். ஆகையால் இத்தகைய அவலங்களிலிருந்து அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பளித்தானோ அவர்களையும், மேலும் யாருக்கு மனதுடன் போராடும் மனவலிமையை அவன் கொடுத்தானோ அவர்களையும் தவிர வேறு எவராலும் இவற்றின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பெறவோ, நிவாரணம் பெறவோ இயலாது.

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ ۚ (الطلاق/3)

“எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்." (65:3) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வுலகிலும் மறு உலகிலும் அடியானுக்குத் தேவையான சகல விடயங்களுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன் என்பதே இவ்வாக்கின் விளக்கமாகும். எனவே பூரணமாக அல்லாஹ்வை நம்புகின்ற ஒருவனை யாராலும் வீணான கற்பனையால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாது. ஏனெனில் இவை யாவும் மனதின் பலவீனத்தாலும், அடிப்படையற்ற பயத்தாலும் ஏற்படுகின்றவை என்பதையும், யார் அல்லாஹ் வின் மீது பூரணமாக நம்பிக்கை வைக்கின்றாரோ அவனை நிச்சயமாக அல்லாஹ் பாதுகாப்பான் என்பதையும் அவன் அறிவான். எனவே இத்தகைய மனப் பிராந்தி எதுவும் அவனை சோர்வடையச் செய்யாது என்பது நிச்சயம்.

ஒருவர் இன்னொருவர் நிலையைத் துருவி பார்க்க வேண்டாம்

قال صلى الله عليه وسلم ( لا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ ) رواه مسلم

“ஒரு முஃமின் இன்னொரு முஃமினான பெண்ணைப் பற்றி துருவிப் பார்க்க வேண்டாம். ஏனெனில் அவளின் ஒரு குணம் அவனுக்கு வெறுப்பூட்டும் படியாக இருக்குமாயின், அவளின் மற்றொரு பண்பு அவனுக்கு திருப்தி தரும்" (முஸ்லிம்) என ரஸூல் (ஸல்) அவர்களின் வாக்கில் பதிவாகியுள்ளது. இந்நபி மொழியில் இரண்டு பயன்கள் அடங்கியுள்ளன.

1- ஒரு மனிதன், அவனுடன் தொடர்புடைய மனைவி, பந்துக்கள், தோழன், ஊழியர் போன்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு இந்த ஹதீஸ் வழி காட்டுகின்றது. எனவே பரஸ்பரம் தொடர்புடைய வர்களுக்கிடையே அவர்கள் விரும்பாத ஏதேனும் குறைபாடு அல்லது வெறுக்கத் தக்க காரியம் நிச்சயம் இருந்தே ஆகும். ஆகையால் அவர்களின் குணங்களில் நமக்கு ஒத்துப் போகக் கூடிய வற்றையும், அல்லது தங்களுக்கிடயிலான தொடர்பை அன்பு வழியில் பலப்படுத்திக் கொள்ள ஏதுவானவற்றையும் கருத்தில் கொண்டு, அவர்களிடமுள்ள மோசமான குணங்களை மறந்து, அவர்களின் நல்ல பண்புகளின் பக்கம் கவணம் செலுத்துவதன் மூலம் தங்களின் நற்பையும், தொடர்பையும் தொடரலாம். இதன் மூலம் நிம்மதியும் உண்டாகும்.

2- இந்த நபி மொழி தரும் இரண்டாவது பயன்: துக்கம் துயரங்கள் நீங்கி மனம் தூய்மை அடையும். மேலும் இரண்டு தரப்பினரும் தம் மீதுள்ள கட்டாய, மற்றும் விரும்பத்தக்க கடமைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வர். மேலும் அவர்களுக்கு மத்தியில் நிம்மதி உண்டாகும். ஆனால் நபியவர்களின் இந்த வழிகாட்டலை யார் அணுசரித்து நடக்கவில்லையோ அவரின் நிலை தலைகீழாகி விடும். அப்பொழுது அவன் மற்றவரி டமிருக்கும் நல்ல விஷயங்களை பார்க்க மறந்து விடுவான். எப்பொழுதும் அவர்களின் தீமைகளின் பக்கமே கவணம் செலுத்துவான். அவ்வமயம் கவலைகள் ஏற்படுவது நிச்சயம். மேலும் தனக்கும், தனக்குத் தொடர்புடையவர்களுக்கும் இடையி லான அன்பில் கலங்கம் ஏற்படுவதும் நிச்சயம். அத்துடன் இரு சாராரும் பரஸ்பரம் ஒருவருக் கொருவர் மேற்கொள்ள வேண்டிய கடமைகளிலும் கோட்டை விடுவார்கள் என்பதும் நிச்சயம்.

பெரிய அவலங்களும் நெருக்கடிகளும் ஏற்படு கின்ற போது அவற்றை பொருமையுடனும் அமைதியுடனும் எதிர் கொள்ளும் பல இலட்சிய வாதிகள், அற்பமான விடயங்கள் சம்பவிக்கும் போது கலக்கமும் கவலையும் அடைந்து விடுகிறார்கள். அவர்களிடம் காணப்பட்ட அன்பில் கலங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதற்குக் காரணம் பாரிய விடயங்களில் தம் உள்ளங்களைக் கட்டுப் படுத்திய அவர்கள், சிறிய விடயங்களில் அப்படிச் செய்ய தவறியமையே. அதனால் அவை அவர்களுக்குத் தீமையாக அமைந்தன. அவர்களின் நிம்மதியில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஆனால் உறுதியான கட்டுப்பாடுடையவன் சிறிய, பெரிய சம்பவங்களின் போதும் மனதைக் கட்டுப்படுத்தி அவ்விடயத்தில் அல்லாஹ்வின் உதவியையும் வேண்டுவான். மேலும் தன் மனதின் பால் தன்னை ஒரு நொடிப் பொழுதேனும் சாட்டி விட வேண்டாமென அல்லாஹ்விடம் பாது காவலும் தேடுவான். அவ்வமயம் அவனை எதிர் கொண்ட பாரிய பிரச்சினைககள் இலகுவடைந்தது போன்று, சிறிய பிரச்சினைகளும் அவனுக்கு இலகுவானவையாக மாறிவிடும். அப்பொழுது அவனது மனம் நிம்மதி அடையும். அவன் வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

நிம்மதியான வாழ்வே நல் வாழ்வு

நிம்மதியான சந்தோசமான வாழ்வே, சரியான நல் வாழ்வு, எனினும் அது குறுகியது என்பதை புத்திசாளி அறிவான். எனவே கவலையைக் கொண்டு வரும், உளத்தூய்மையைக் கலங்கப் படுத்தும் காரியங்களின் மூலம் அதில் குறை ஏற்படாதவாறு கவணித்துக் கொள்வது அவசியம். இல்லா விட்டால் நல் வாழ்வில் கலங்கம் ஏற்பட்டு விடும். ஆகையால் வாழ்வில் கவலை தரும் காரியங்களையும், உளத்தூய்மையைக் கலங்கப் படுத்தும் காரியங்களையும் அப்புறப் படுத்தும் விடயத்தில் அவன் கவணம் செலுத்துவான். இவ்விடயத்தில் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் மத்தியில் வேறுபாடு எதுவும் இருக்காது. எனினும் இந்தப் பண்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் விடயத்தில் முஃமினின் பங்களிப்பும், அதன் மூலம் அவன் அடையும் பயனும் அதிகம்.

மேலும் தனக்கு விருப்பமில்லாத ஏதும் ஏற்படும் போது அல்லது ஏதேனும் பீதி உண்டாகும் போது அதனை தான் பெற்றுள்ள மார்க்க சம்பந்தமான, உலக சம்பந்தமான அருட்கொடைகளுடன் ஒப்பிட்டு பார்த்தல் வேண்டும். அப்பொழுது தனக்குக் கிடைத்துள்ள நிஃமத்துக்கள் அதிகம் என்பதும், தன்னை அடைந்துள்ள வெறுப்பான சம்பவங்கள் அற்பமானவை என்பதும் தெளிவாகும்.

அவ்வாறே தனக்கேற்பட்டிருக்கும் அச்சமூட்டும் தீய நிகழ்வுகளை, தான் பெற்றுள்ள அமைதியான வாய்ப்புக்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் வேண்டும். அச்சமயம் வலிமை வாய்ந்ததை, பலவீனம் மிகைத்து விடும் படி இடமளித்தலாகாது. இதன் மூலம் அவனுடைய துக்கம் துயரங்கள் அகலும். மேலும் அவனை அணுகச் சாத்தியமான பெரும் கஷ்டங்களை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள வும் இயலுமாகும். இவ்வாறு அவலங்கள் ஏற்படும் போது அவற்றைத் தாங்கிக் கொள்ளவும், அல்லது அவற்றைக் இலகு படுத்திக் கொள்ளவும், மேலும் அவை ஏற்படாது தடுத்துக் கொள்ளவும், தக்க மன வலிமையை அவன் பெறுவான்.

மனிதர்களிடமிருந்து உங்களை தொல்லைகள் வந்தடையும் போது, குறிப்பாக அவர்களின் வசை மொழிகள் உங்களைச் சீண்டும் போது நீங்கள் அதன் பால் கவணம் செலுத்தாமலும், உங்களின் உணர்ச்சிகளுக்கு இடம் தராமலும் இருப்பது பயன் மிக்கதாகும். அப்பொழுது அவர்களின் தொல்லைகள் உங்களுக்குக் கேடாக அமையாது, அவை அவர்களுக்கே கேடாக அமைந்து விடும்.

உங்களின் வாழ்க்கை, உங்களின் சிந்தனைகளின் தொடர்ச்சியாகும். எனவே உங்களின் சிந்தனைகள் மார்க்கம் அல்லது உலகம் சம்பந்தமான நலன் களுடன் தொடர்புபட்டிருப்பின், உங்களின் வாழ்வு சிறப்புற்று விளங்கும். அவ்வாறில்லை எனில் விளைவு எதிர் மாறானது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

கவலைகள் நீங்க பயன் தரும் மற்றுமொரு வழி, தான் புரியும் நல்ல காரியத்திற்கு அல்லாஹ்வை யன்றி வேறு யாரிடமும் நன்றிக் கடனை எதிர்பாராமல் இருத்தல். எனவே எவருக்கேனும் உதவி உபகாரம் செய்யும் போது அதனை அல்லாஹ்வுக்காகச் செய்கின்றேன் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர உதவி பெற்றவனின் நன்றிக் கடனைப் பொருட்படுத்தக் கூடாது. இதுதான் அல்லாஹ்வின் சிறந்த அடியார்களின் பண்பாகும். இவர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّـهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا ﴿٩﴾

“உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான். உங்களிட மிருந்து நாம் யாதொரு பிரதிபலனை அல்லது (நீங்கள்) நன்றி செலுத்து வதையோ நாங்கள் நாடவில்லை."(76/9)

தாங்கள் புரியும் உபகாரங்களுக்காக மனிதர் களிடம் பிரதி பலன் எதனையும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதை இத் திருவசனம் எடுத்துக் கூறுகின்றது.

எனவே உங்களுடன் தொடர்புள்ள குடும்பம், பிள்ளைகள் மற்றும் பந்துக்கள் போன்ற அனைவர் களுடனும், அன்றாட நடவடிக்கைகளின் போது இதனைக் கருத்தில் கொள்வது அவசியம். மேலும் அவர்களிடமிருந்து உங்களுக்குத் தீமைகள் ஏற்படுகின்ற போது அவற்றை நீங்கள் புறக்கணித்து விடுவீர்களாயின் அதனால் உங்களுக்கு மன அமைதி உண்டாகும்.

பயன் தரும் கருமங்களை எப்பொழுதும் கண்களின் எதிரில் வைத்து, அதனை சாத்தியப் படுத்தும் காரியத்தில் ஈடுபடல் வேண்டும். தீமை பயக்கும் கருமங்களின் பக்கம் கவணம் செலுத்தக் கூடாது. இவ்வாறு துக்கம் துயரங்களை ஏற்படுத்தும் காரியங்களை செயலிழக்கச் செய்வதன் மூலமும், முக்கிய பணிகளில் மன அமைதியுடன் ஈடுபாடு கொள்வதன் மூலமும் உதவி பெறுவது அவசியம்.

பயன் தரும் இன்னொரு விடயம்தான் எல்லா காரியங்களையும் உரிய காலத்தில் செய்து முடித்து விட்டு, எதிர் கால வேலைகளுக்காக நேர காலத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளல். அவ்வாறின்றி உரிய காலத்தில் வேலைகளைச் செய்து முடிக்காது போனால், முந்திய வேலைகளுடன் புதிய வேலைகளும் சேர்ந்து கடமை அதிகரித்து விடும். அப்பொழுது அதன் அழுத்தம் அதிகரித்து விடும். எனவே ஒவ்வோரு காரியத்தையும் உரிய காலத்தில் செய்து முடிப்பதன் மூலம் அடுத்து வரும் காரியங்களை நல்ல சிந்தனையுடனும், உறுதியாகவும் நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டும்.

நல்ல கருமங்களைத் தெரிவு செய்யும் வேளையில் மிக அவசியமான முக்கியமான காரியத்திற்கு முதலிடம் அளித்தல் வேண்டும். அதிலும் மனதுக்கு பிடித்தமான விடயத்தை இனங்காண்பது அவசியம். ஏனெனில் மனதுக்கு ஆர்வமில்லாத விடயத்தில் உள்ளம் ஈர்ப்புக் கொள்ளாது, அதனால் சோம்பலும், சலிப்பும் உண்டாகும். மேலும் அந்த காரியம் பற்றி நல்ல முறையில் சிந்திப்பதுடன், மற்றவர்களின் ஆலேசனையையும் உதவியும் பெறல் வேண்டும். ஏனெனில் யார் ஆலோசனை களைப் பெற்றுக் கொள்கின்றாரோ, அவர் கவலை அடைய மாட்டார். எனவே நீங்கள் செய்யப் போகும் காரியத்தைப் பற்றி ஆழமாக சிந்தியுங்கள். பின்னர் காரியத்தை செயல் படுத்த உறுதி கொண்டு விட்டீர்களாயின், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள். நிச்சயமாக தன் மீது நம்பிக்கை வைக்கின்ற வர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.


معلومات المادة باللغة العربية